பிறந்தநாளை மறந்து பணியாற்றிய காவலர்கள் : உயரதிகாரியின் “சர்ப்ரைஸ்“… நெகிழ்ந்த போலீசார்..

4 days ago 1
Police Bday -Updatenews360

கரூர் : கடமையே கண்ணாக பிறந்த நாளை மறந்து பணியாற்றிய காவலர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடிய காவல் துறை உயரதிகாரியின் செயல் சக காவலர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கரூர் நகர காவல் நிலையம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் முதல்நிலை காவலர்களாக பணியாற்றுபவர்கள் நளினி மற்றும் ராஜேந்திரன். கடந்த சில நாட்களாக ஊரடங்கு கால பணி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் காவலர்கள் சீருடை அணிந்து பணிக்கு வந்திருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உத்தரவின் பெயரில் கரூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கரூர் நகர காவல் நிலைய வராண்டாவில் நளினி மற்றும் ராஜேந்திரன் பெயர் எழுதப்பட்ட கேக் வாங்கி வரப்பட்டு, பணியில் இருந்த காவலர்களை கேக் வெட்டியும், கேக் ஊட்டி விட்டும், பொன்னாடை போர்த்தியும், வாழ்த்து அட்டையை வழங்கி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.

காவல் உயர் அதிகாரிகளின் இந்த செயல்களால் நெகிழ்ந்து போன காவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், அவர்கள் இன்று அவர்களுடைய குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாட ஏதுவாக அவர்களுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல் நிலையத்தில் பணியாற்றும் சக காவலர்கள், உதவி ஆய்வாலர்கள், ஆய்வாலர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய தலைமை காவலர்களான வேங்கடலட்சுமி, தமிழ்செல்வி ஆகியோருக்கும் பிறந்த நாள் வாழ்த்து மடலை வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றும் காவலர்கள், கொரோனா காலம் என்பதால் மன உளைச்சல்களுக்கு ஆளாகி பல்வேறு முடிவுகளை தேடி செல்லும் நிலையில், காவலர்களின் பிறந்த தினத்தை உயர் அதிகாரிகள் தலைமையில் கொண்டாடினால், மன உளைச்சல் விலகி மகிழ்ச்சி கிட்டும் என்பதை இந்த சம்பவம் எடுத்துரைத்துள்ளது.

Read Entire Article