Connect with us

Uncategorized

இந்தியா, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது

Published

on


விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றின.

இதைத்தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்-இரவு ஆட்டம்) அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டி தொடருக்கு தயாராகும் விதமாக ரஹானே தலைமையிலான இந்தியா ‘ஏ’-டிராவிஸ் ஹெட் தலைமையிலான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையே சிட்னியில் நடந்த முதலாவது 3 நாள் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. அந்த ஆட்டத்தில் இந்திய தரப்பில் முதல் இன்னிங்சில் ரஹானே ஆட்டம் இழக்காமல் 117 ரன்னும், புஜாரா 54 ரன்னும், 2-வது இன்னிங்சில் விருத்திமான் சஹா ஆட்டம் இழக்காமல் 54 ரன்னும் எடுத்தனர். மற்றபடி யாரும் சோபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 125 ரன்கள் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்க் ஸ்டகெட்டி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது 3 நாள் பயிற்சி ஆட்டம் சிட்னியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதலாவது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடைபெறுவதால் அதற்கு ஒத்திகையாக அமையும் விதத்தில் இந்த பயிற்சி ஆட்டமும் பகல்-இரவாக நடைபெறுகிறது.

விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியில் சீன் அப்போட், ஜோ பர்ன்ஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மார்க் ஸ்டகெட்டி உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த பயிற்சி ஆட்டத்தில் ஹெல்மெட்டில் பந்து தாக்கியதால் பாதிப்படைந்த தொடக்க ஆட்டக்காரர் வில் புகோவ்ஸ்கி இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் டேவிட் வார்னர் ஆடாததால் அந்த இடத்துக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணி ஆலோசித்து வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய ஜோ பர்ன்ஸ் இந்த ஆட்டத்தில் ஜொலித்தால் வாய்ப்பை பெறலாம். கேமரூன் கிரீன், ஸ்வெப்சன் ஆகியோரும் தங்களது ஆட்டத்தை பொறுத்து டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

இந்திய ஆடும் லெவன் அணி இந்த ஆட்டத்தில் வீரர்கள் காட்டும் திறமையை வைத்து இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வாலுடன் இணைந்து களம் இறங்குவது பிரித்வி ஷாவா, சுப்மான் கில்லா, லோகேஷ் ராகுலா? என்பதற்கு இந்த ஆட்டத்தை வைத்து முடிவு காணப்படலாம். 5 சிறப்பு பவுலருடன் களம் இறங்குவதா? அல்லது 4 பவுலர் மற்றும் பகுதி நேர பவுலர், பேட்ஸ்மேனுமான ஹனுமா விஹாரியை சேர்க்கலாமா? என்பது குறித்தும் முடிவு செய்யப்படும். மற்றபடி அணியின் வழக்கமான இடங்களில் ஆடும் வீரர்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது.

பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் விராட்கோலி விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ‘களம் இறங்கி விட்டு பாதியில் வெளியேறுவது தனக்கு பிடிக்காது என்றும் விளையாடினால் முழுமையாக விளையாடுவேன். உடல் தகுதி குறித்து அணியின் பிசியோதெரபிஸ்டுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன்’ என்று விராட்கோலி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அடுத்த மாதம் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் அவரை கவனிக்கும் பொருட்டு முதல் டெஸ்ட் முடிந்ததும் நாடு திரும்ப இருக்கும் அவர் டெஸ்ட் போட்டிக்கு நன்றாக தயாராக பயிற்சி ஆட்டத்தில் ஆடுவார் என்று நம்பப்படுகிறது. விராட்கோலி விளையாடாவிட்டால் ரஹானே அணியை வழிநடத்துவார். இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.Source link

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *