News
வேளாண்மை பட்டப் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு! | TNAU invites online application for ug admission 2019
Published
2 weeks agoon
By
admin
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2019-20 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் இளம் அறிவியல் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, உணவு முறை, பட்டு வளர்ப்பு, வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பவியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பட்டப் படிப்புகள் உள்ளன.
இதில், வேளாண்மை பட்டப் படிப்புக்கு 3,105 இடங்கள், தோட்டக்கலை படிப்புக்கு 315, வேளாண்மைப் பொறியியல் படிப்புக்கு 110 என மொத்தம் 3,905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.
பட்டப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ள மாணவ-மாணவிகள், பல்கலைக் கழகத்தின் www.tnau.ac.in/ugadmission.html என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பத்தை இணையதளம் மூலமே பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
தொடர்ந்து, விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும். விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாளாகும்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை ஜூன் 10 முதல் 12-ஆம் தேதிக்குள் 3 நாள்களில் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களின் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
கலந்தாய்வு:
தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும். தரவரிசை எண் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும்.