Business
எகிறிய கச்சா எண்ணெய் விலை.. மீண்டும் $56 டாலருக்கு மேல் உச்சம்.. அப்படின்னா பெட்ரோல் டீசல் விலை..! | Crude oil prices above $56 as supply issue
Published
2 weeks agoon
By
admin

கச்சா எண்ணெய் விலையானது உச்சம்
செவ்வய்கிழமையன்று பேரலுக்கு 56 டாலர்களை தொட்டுள்ளது. இது 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. அதோடு உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் இருப்பானது குறைந்துள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உற்பத்தியை குறைக்க திட்டம்
இதற்கிடையில் எண்ணெய் ஜாம்பவான் ஆன சவுதி அரேபியா கூடுதலாக 1 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியினை குறைக்க உள்ளதாகவும், இது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குறைக்கலாம் என்றும் தெரிகிறது. தொடர்ச்சியாக 5 வாரங்களாகவே கச்சா எண்ணெய் இருப்பு குறித்தான அறிவிப்புகளில், இருப்பு குறைவாக உள்ள நிலையில், எண்ணெய் சப்ளை குறைந்துள்ளது.

WTI கச்சா எண்ணெய்
WTI கச்சா எண்ணெய் விலையானது 1.65 சதவீதம் அதிகரித்து 53.11 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏற்றம் காண ஆரம்பித்த கச்சா எண்ணெய் விலையானது, தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய்
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 1.55 சதவீதம் அதிகரித்து 56.52 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தேவை அதிகரிக்கும் இதே நேரத்தில், உற்பத்தி குறைப்பானது விலையேற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கலாம்
அமெரிக்கா தலைவர் ஜோ பிடன் ஜனவரி 20ல் இருந்து பதவியேற்க உள்ள நிலையில், கூடுதல் கொரோனா ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கத்தொகை அறிவிப்புகள் வெளியானால் பொருளாதாரம் மீண்டு வரும். இதனால் தேவை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை
எனினும் ஒரு புறம் அதிகரித்து வரும் புதிய கொரோனா காரணமாக, கச்சா எண்ணெய் தேவையானது குறையலாமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் ஏற்கனவே ரெக்கை இல்லாமல் பறந்து கொண்டுள்ள பெட்ரோல், டீசல் விலையானது இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ தெரியவில்லை.
