News
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் முழுவதும் நிரப்பிய பி.சி., ஓ.சி இடங்கள்! | MBBS Admission In Tamilnadu: BC, OC seats filled Now
Published
2 weeks agoon
By
admin
மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் நிரம்பிவிட்டதால் அடுத்து வரும் நாள்களில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட பி.சி, ஓ.சி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டுக்கென 3,968 எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன. பல் மருத்துவத்திற்கான பிடிஎஸ் படிப்புகளுக்கு 1,070 இடங்கள் உள்ளன.
இதில், நிர்வாக ஒதுக்கீட்டை பொறுத்தவரையில் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 852 எம்பிபிஎஸ் இடங்களும், 690 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன. அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
பொதுக் கலந்தாய்வு தொடங்கிய மூன்று நாள்களில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், கோவை, வேலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கரூர், பெருந்துறை ஐஆர்டி உள்ளிட்டு 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள பி.சி, ஓ.சி, இடங்கள் முழுவதுமாக நிரம்பின.
அதேபோன்று சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள இடங்களும் நிரம்பின. எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் மட்டுமே ஒரு சில இடங்கள் அங்கு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தற்போது தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கின்றன. இந்தச் சூழலில்தான், மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு செயலர் செல்வராஜ் இதுகுறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பி.சி., ஓ.சி. வகுப்பு மாணவர்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்புவோர் மட்டும் இனிவரும் நாள்களில் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.