Travel
சவாலான நேபாள சாலைகளை கலக்கிய டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள்!
Published
3 days agoon
By
admin

ஆம், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை 30 லட்சத்தை எட்டியதை கொண்டாடும் விதத்தில், அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த முதல் சர்வதேச மீடியா டிரைவில் கலந்து கொள்வதற்காக டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அப்பாச்சி பிராண்டில் விற்பனையாகும் 160, 180, 160 4வி, 200 4வி மற்றும் ஆர்ஆர் 310 ஆகிய பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனை 30 லட்சத்தை கடந்திருப்பதை கொண்டாடும் விதத்தில், நேபாளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஒரு சில ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதை அறிந்துகொண்டேன்.

‘பயணங்கள் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்தும்” என்ற முன்னாள் இங்கிலாந்து பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலியின் தத்துவம் நினைவில் வந்து போன நொடியில், டிவிஎஸ் அழைப்பை ஏற்றுக் கொண்டு நேபாள பயணத்தில் இணைந்தேன்.
பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் தினசரி சிக்குண்டு கிடந்த எமக்கு, இந்த பயணம் நிச்சயம் புதிய அனுபவத்தை தரும் என்பதுடன் பைக் பயண விரும்பியான எனக்கு ‘கரும்பு தின்ன கூலியா!’ என்பதுபோல, செயல்திறன் மிக்க அப்பாச்சி வரிசை பைக்குகளை ஓட்டுவதற்கான வாய்ப்பை ஆவலோடு எதிர்நோக்கி பெங்களூரிலிருந்து நேபாளத்திற்கு பயணித்தேன்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் முதல் நாள் மாலை நடந்த அப்பாச்சி பைக்குகளின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத்தொடர்ந்து, மறுநாள் காலை காத்மாண்டுவில் உள்ள ஓட்டல் கிரவுன் பிளாஸாவிலிருந்து பொகாரா பகுதியிலுள்ள ஷங்கிரி லா கிராமத்தை நோக்கி 200 கிமீ தூரத்திற்கான முதல் நாள் பயணத்தை துவங்கினோம். முதலாவதாக, அப்பாச்சி 180 பைக்கை தேர்வு செய்தேன்.

ஒருபக்கம் முகடுகளையும், பள்ளத்தாக்குகளையும் வைத்து இமயமலை எம்மை மிரட்டியது. மறுபுறத்தில் சூரிய வெப்பம் 32 டிகிரியாக காட்டி எனக்கும், அப்பாச்சிக்கும் சவால் கொடுத்தது. எனினும், எமது நிலையை புரிந்து கொண்டது போல, அப்பாச்சி 180 பைக் இமயமலை சாலைகளை எமது கட்டளைக்கு ஏற்ப அனாயசமாக எதிர்கொண்டு பறந்தது.

காலையில் துவங்கி சித்வான் பகுதியிலுள்ள சித்தார்த்தா ரெஸ்ட்டாரண்டில் நேபாளத்தின் விசேஷமான மோமோ மதிய உணவு வரையிலான பயணத்தை சிரமம் இல்லாமல் அமைத்து கொடுத்தது அப்பாச்சி 180 பைக். மதிய உணவு முடிந்த கிறக்கத்தில் இருந்த எம் கையில் அப்பாச்சி 200 4வி பைக் வந்ததும், களைப்பு மறந்து உற்சாகம் பிறந்தது. இந்த பகுதியை சேர்ந்த மகர்ஸ் மற்றும் குருங்ஸ் ஆகிய இனத்தை சேர்ந்தவர்கள்தான் கூர்கா வீரர்களாக நம் ஊரில் அழைக்கப்படுகின்றனர்.

பைக்கில் அமர்ந்து சென்றதுமே, டிவிஎஸ் – பிஎம்டபிள்யூ மோட்டோராட் கூட்டணியானது அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்குடன் நிற்கவில்லை. டிசைன், தரம், பொறியியல் தரம் என அனைத்தும் அப்பாச்சி 160 4வி மற்றும் 200 4வி பைக்குகளிலும் பிரதிபலிப்பதை கண்கூடாக காண முடிந்தது.

சித்வானிலிருந்து பொகாரா வரையிலான அதிக வளைவு, நெளிவுகள் கொண்ட மலைச்சாலைகளை அப்பாச்சி 200 4வி பைக் எளிதாக எதிர்கொண்டு சிட்டு போல பறந்தது. குறிப்பாக, இந்த பைக்கின் கிளட்ச் மற்றும் KYB சஸ்பென்ஷன் அட்டகாசம் என்று கூறலாம். அதேபோன்று, கட்டுப்படுத்துவதற்கு ஸ்லிப்பர் க்ளட்ச் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களும் கொடுத்த உற்சாக பயணத்துடன் சூரியன் விடைபெறும் வேளையில் பொகாரா பள்ளத்தாக்கு பகுதியை அடைந்தோம்.

நேபாளத்தில் பொகாரா பள்ளத்தாக்கு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இமயமலையின் அன்னப்பூர்ணா மலைத்தொடர்களின் முகடுகள் சூழ்ந்த பொகாரா பள்ளத்தாக்கு நேபாளத்தின் டேங் பள்ளத்தாக்கு பகுதிக்கு அடுத்து, இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு பகுதியாக விளங்குகிறது. இந்த பள்ளத்தாக்கில் உள்ள ஷங்ரி லா கிராமத்தில்தான் இரவு தங்கினோம்.

மறுநாள் காலை பொகாராவிலிருந்து அப்பாச்சி 160 4வி பைக்கில் காத்மாண்டு நோக்கி திரும்பும் திட்டத்துடன் சித்வான் நோக்கி பயணத்தை துவங்கினோம். இந்த பைக்கின் டிசைன் அப்பாச்சி 200 4வி டிசைன் அடிப்படையிலானதுதான் என்பதால் பெரிய மாற்றங்கள் இல்லை. அதேநேரத்தில், ஓட்டுவதற்கு கச்சிதமாகவும், எளிதாகவும் இருக்கிறது.

பொகாராவிலிருந்து வழியில் உள்ள சரங்கோட் என்ற இடத்தில் ஓர் சிறிய இடைவேளை எடுக்க நிறுத்தினோம். இமயமலையின் உச்சியில் நிற்பது போன்ற உணர்வை அங்கிருந்த மலை முகடு கொடுத்தது. இமயமலையின் மிகப்பெரிய மலைத்தொடர்கள் அமைந்த பகுதிகளில் ஒன்றாகவும், உலக அளவில் 10வது பெரிய மலைத்தொடர் அமைந்த பகுதியாகவும் சரங்கோட் குறிப்பிடப்படுகிறது. மிக அற்புதமான சூழலை அடக்கிக்கொண்டு தன்னடக்கத்துடன் நிற்கிறது அந்த பகுதி. இந்த பகுதியில் உள்ள தவளகிரி மற்றும் மனஸ்லு பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க சிறந்த இடங்களாக இருக்கின்றன. இங்கு பாரா கிளைடிங் சாகச விளையாட்டுகளும் நடக்கும் பகுதியாக இருக்கிறது.

சரங்கோட்டின் சுழன்றடிக்கும் மலைச் சாலைகளில் அப்பாச்சி 160 4வி பைக் அலட்டிக் கொள்ளாமல் கடந்து இறங்கியது. இந்த பைக்கின் எஞ்சின் மிக அற்புதமாக ட்யூனிங் செய்யப்பட்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதன் எஞ்சின் வெண்ணெய் போல மிக மென்மையான உணர்வை அளித்தது. இதனை உருவாக்கிய டிவிஎஸ் பொறியாளர்களுக்கு இங்கே ஒரு சபாஷ் சொல்லிவிடலாம்.

தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. சமூகத்தில் உள்ள அனைத்து வருவாய் பிரிவினருக்கும் ஏற்ப, மொபட், ஸ்கூட்டர் மற்றும் ஸ்போர்ட்ஸ் பைக் என ஒவ்வொருவரின் விருப்பம், பட்ஜெட்டுக்கு தக்கவாறு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

குறிப்பாக, டிவிஎஸ் நிறுவனத்தின் பொறியியல் திறனை உலகுக்கு பரைசாற்றும் அப்பாச்சி வரிசை பைக்குகளின் விற்பனை 30 லட்சத்தை எட்டி சாதனை படைத்திருப்பது அந்த நிறுவனத்தின் மீதான வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது.

இந்த சூழலில், இந்தியா மட்டுமின்றி உலக அளவில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் டிவிஎஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் மிக சிறந்த பிராண்டாக தன்னை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒருபடியாக, அண்டை நாடான நேபாளத்தில் பைக்குகளுக்கு இருக்கும் வரவேற்பை கருதி, அண்மையில் தனது வர்த்தகத்தை அங்கு துவங்கியது டிவிஎஸ் நிறுவனம். அப்பாச்சி வரிசையில் மூன்று பைக்குகளை ஓட்டிய அனுபவத்தில், நேபாளத்தின் நில அமைப்பு மற்றும் சீதோஷ்ண நிலைகளை டிவிஎஸ் பைக்குகள் எளிதாக எதிர்கொண்டன.
எனவே, நேபாள வாடிக்கையாளர்களையும் டிவிஎஸ் தயாரிப்புகள் நிச்சயம் கவர்ந்து இழுக்கும். இந்தியா உள்ளிட்ட நாடுகளை போன்றே, தனது பொறியியல் திறன் மற்றும் சரியான பட்ஜெட் காரணமாக, நேபாளத்திலும் விற்பனையில் டிவிஎஸ் தயாரிப்புகள் முத்திரை பதிக்கும் என்று நம்பலாம்.