Business
பெங்களூரில் அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.. இனி எலக்ட்ரிக் கார் விற்பனை சூடு பிடிக்கும்..! | Elon Musk’s Tesla opens India office at Bengaluru: New path of EV market in india
Published
6 days agoon
By
admin

டெஸ்லா இந்தியா
இந்தியாவில் டெஸ்லா-வின் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுக் கர்நாடாக மாநிலத்தின் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது என நிறுவன பதிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் டெஸ்லா அதிகாரப்பூர்வமாகத் தனது வர்த்தகத்தை இந்தியாவில் விரிவாக்கம் செய்துள்ளது.

பெங்களூரில் அலுவலகம்
மேலும் பெங்களூரில் லவேலி சாலையில் புதிய அலுவலகத்தைத் துவங்க உள்ளதாகவும் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இந்த அலுவலகம் தான் இந்திய வர்த்தகத்தின் தலைமையிடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 தலைவர்கள்
டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவன பதிவுகளில் 3 பேரை தலைவராக அறிவித்துள்ளது. இதில் வைபவ் தனீஜா, வெங்கட்ராமன் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபெயின்ஸ்டெயின் ஆகியோரை தலைவர்களாக நியமித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி
பெங்களூர் தொழில்நுட்ப வர்த்தகத்திற்குத் தலைமையிடமாக மட்டும் அல்லாமல் ஏரோஸ்பேஸ் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்கும் தலைமையிடமாக விளங்கும் நிலையில் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்திற்கு மட்டும் அல்லாமல் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் பெங்களூர் சரியான தேர்வாக அமைந்துள்ளது.

டெஸ்லா எதிர்கால வளர்ச்சி
டெஸ்லா இந்தியாவில் முதற்கட்டமாகக் கார் விற்பனைக்காக மட்டுமே அலுவலகத்தைத் துவங்கியுள்ளது. பின்னாளில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மையம், உற்பத்தி தளம் ஆகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபிலிட்டி நிறுவனங்கள்
இதேவேளையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி மற்றும் போக்குவரத்து நிறுவனங்களான ஓலா, உபர், பவுன்ஸ்,வோகோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

ஓலா எலக்ட்ரிக் பைக்
சமீபத்தில் ஓலா கைப்பற்றிய வெளிநாட்டு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் புதிய வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது. இதற்காக ஓலா சுமார் 2,400 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.

கார் நிறுவனங்கள்
இதுதவிர மஹிந்திரா, மாருதி சுசூகி, ஹூண்டாய் ஆகிய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் பெரும் போட்டி உருவாக உள்ளது.
இன்றளவில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பிரிவு வர்த்தகம் 1 சதவீதத்திற்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.